உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள பழைய திருப்பணிக்குழுவிற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் முல்லையாற்றங்கரையில் உள்ளது காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும்.. ராகு,கேது பகவான்கள் இங்கு தனித்தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக உள்ளனர். பிரசித்திபெற்ற இந்த கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி சண்முகம் தலைமையில் 42 பேர் கொண்ட திருப்பணிக்குழுவை அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு அமைத்தது. திருப்பணிக்குழுவினரும் உபயதாரர்களை நியமித்து இதுவரை 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பணிக்குழுவின் பணி காலம் ஒராண்டு என்பதால் திருப்பணிக்குழு காலியானது. நீட்டிப்பு செய்து தர விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் திருப்பணி நின்றுபோனது, இதற்கிடையே ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் பணிகள் நடைபெறவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கோயிலிற்கு வந்த இணை ஆணையர் பாரதி, எம், எல்.ஏ. ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கெனவே பணிகள் மேற்கொண்ட திருப்பணிக்குழு மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது. புதிய திருப்பணிக்குழுவை நியமிக்க முடியாது என்றும், ஏற்கெனவே திருப்பணி செய்த குழுவினர் உபயதாரர்களை ஏற்பாடு செய்து எஞ்சிய பணிகளை முடிக்கவும், வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்தவும் கூறியது. அதை தொடர்ந்து பழைய திருப்பணிக்குழுவினர் மீண்டும் திருப்பணிகள் செய்ய தயாராகி வருகின்றனர்.