பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
06:06
சென்னை: கடவுள் - பக்தர் இடையிலான உறவை மையப்படுத்தி அரங்கேற்றப்பட்ட, பெருமாளே - 2 நாடகம், ரசிகர்களின் கைத்தட்டலையும், பாராட்டையும் பெற்றது.
சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்து வரும், பவன் நாடக திருவிழாவில் நேற்று முன்தினம் டாம் மீடியாஸ் குழுவின் சார்பில் ராதாகிருஷ்ணன் எழுதி, சுரேஷ்வர் இயக்கத்தில் உருவான பெருமாளே - 2 நாடகம் அரங்கேற்றப்பட்டது.இதில், மதுவந்தி, சுரேஷ்வர், சுதர்சனன், வித்யாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சினிமா படமாகவே எடுக்கும் அளவுக்கு, எந்த கால கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் அரங்கேற்றப்பட்ட, பெருமாளே - 2 நாடகத்தில், வழக்கறிஞர் பெரிய பிராட்டியாக மதுவந்தி, பெருமாளாக சுதர்சனன், பெரிய பிராட்டியின் மகன் வானமாமலையாக சுரேஷ்வர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
குபேரனிடம் வாங்கிய கடன் தொல்லையால், தன்னிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியும், காணிக்கை செலுத்தாத பக்தர்களிடம், காணிக்கை வசூலிக்க பெருமாள் பூலோகம் வருகிறார். பெரிய பிராட்டியின் சம்பந்தி, தன் குழந்தை மீண்டு வரவேண்டி, எடைக்கு எடை தங்கம் தருவதாக வேண்டிக் கொண்டார். அப்போது குழந்தை 300 கிராம் மட்டுமே இருந்தது. ஆனால் காணிக்கையை தர அவர் மறந்து விட, தற்போது அந்த குழந்தை பெரிய பிராட்டியின் மருமகளாக 82 கிலோ எடையில் உள்ளார். இதை அறிந்த பெருமாள், பெரிய பிராட்டியிடம், 82 கிலோ தங்கம் கேட்க, அவரோ 90 கிலோ எடை உடைய தங்கம் என்ற நபரை பெருமாளிடம் அனுப்ப முயல்கிறார்.இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர், நீதிமன்றம் வரை செல்ல இறுதியில் வென்றது யார்... என்பதே மீதி நாடகத்தின் கதை. இஷ்டத்திற்கு வேண்டாமல், இஷ்டப்பட்டு வேண்டுங்கள்; துண்டுச்சீட்டு தளபதி அல்ல, அவர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட பல வசனங்கள், அரசியல் நெடி வீசும் வசனங்கள், மக்களிடம் கைத்தட்டலை அள்ளின.மொத்தத்தில், பெருமாளே - 1 பகுதியை காட்டிலும் பெருமாளே - 2 ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.