கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளில் ஒன்றை நினைவுபடுத்துவது தான் ஸ்ரீநாத் த்வாரா. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து 48 கி.மீ., துாரத்தில் உள்ளது இக்கோயில். இங்கு கருப்புநிற சலவைக்கல்லில் வசீகரமாகச் சிரிக்கிறான் கண்ணன். வலது சுண்டுவிரலை மேலே உயர்த்தியபடி காட்சி தருகிறான். கோவர்த்தனமலையைத் துாக்கி யாதவர்களைக் காத்த கோலம். இந்தக் கண்ணன் திருவுருவம் தொடக்கத்தில் பிருந்தாவனத்தில்தான் இருந்தது. அது ராஜஸ்தான் வந்து சேரக் காரணம் அவுரங்கசீப்! ஹிந்து விரோதியான அவனது பார்வை படாமல் கண்ணனைப் பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானித்தார் கோஸ்வாமி தாவோஜி என்பவர். ராஜஸ்தான் மேவார் மன்னர் ராணாவின் ஆதரவுடன் கண்ணன் சிலையை எடுத்து வந்தார். ஆனால் அஐ ஸ்ரீநாத் த்வாரா வந்த போது சட்டென நின்றது. அதற்கு மேல் நகராததால் இப்போதைய ஊரில் நிறுவப்பட்டது. இப்போதைய கோயில் எழும்பக் காரணமானவர் வல்லபாச்சார்யார் மற்றும் அவரது மகன் விட்டலேஷ் கோஸ்வாமி. கோயிலே அரண்மனை போல காட்சி அளிக்கிறது. ராஜஸ்தானி ஓவியங்கள் பின்புலத்தில் இருக்க, கைகளில் மெகந்தி வரைந்து கொண்ட பெண்கள் கண்ணனின் புகழைப்பாடி கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி போன்ற நாட்களில் ஆடும் அழகே அழகு.