பதிவு செய்த நாள்
09
ஜூன்
2022
08:06
காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், ௫௩ ஆண்டுகளுக்குப் பிறகு, கம்பு இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் தோன்றி, குறிப்பால் உணர்த்தப்படும் பொருள், இந்தப்பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம். அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இடம் பெறும். அதேசமயம் இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த ஏப்.,3ம் தேதி முதல், 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சம் பழம் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கொங்கூரை சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில் உத்தரவான, நிறைபடி கம்பு நேற்று முதல் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: நிறைபடி கம்பு வைத்துள்ளதால், மழை வளம் பெருகி மானாவாரி நிலங்களிலும் பயிர் செழிக்கும். மக்களிடம் கம்பின் பயன்பாடு அதிகரிக்கும்; வேளாண்மை செழிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
53 ஆண்டுகளுக்கு பின்... ஆண்டவன் உத்தரவு பெட்டியில், 1969ம் ஆண்டு கம்பு இடம் பெற்றது. அப்போது மக்கள் மத்தியில் கம்பு தானியம் பயன்பாடு அதிகரித்தது. தற்போது, 53 ஆண்டுகளுக்குப் பிறகு, கம்பு வைக்கப்பட்டுள்ளதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.