பதிவு செய்த நாள்
11
ஜூன்
2022
03:06
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் என ஒன்பது வகையான அபிேஷகமும், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜையும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், தாயாருடன் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆனைமலை : ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று, சர்வ ஏகாதசி மற்றும் சுப முகூர்த்தத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடந்தது.