தளவாய்புரம்: தேவதானம் தவம் பெற்ற நாயகி நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேவதானம் சாஸ்தா கோவில் ரோட்டில் ஹிந்து அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று சுவாமி மற்றும் அம்பாள் விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில், திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தொடங்கி 2:30 வரை நடந்தது. சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அன்னதானம் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக இன்று காலை தேர் திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் துரை. ரத்தினகுமார், செயல் அலுவலர் கலாராணி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.