பதிவு செய்த நாள்
12
ஜூன்
2022
07:06
வேலாயுதன்: முருகப்பெருமானின் ஆயுதம் வேல். இது வெற்றிக்கும், அறிவுக்குமான அடையாளம். உருவில் நீண்டும், நடுவில் அகன்றும், முனையில் கூர்மையாக இது இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் அடைய அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவராக நாம் இருக்க வேண்டும் என்பதை வேல் உணர்த்துகிறது.
ஆறுமுகச்சிவன்: ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை சிவன் உண்டாக்கினார். அதனை தேவர்கள் கங்கை நதியில் கொண்டு சேர்த்தனர். கங்கை நதியானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கை என்னும் குளத்தில் கொண்டுபோய் விட்டது.ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்து கந்தனாக்கினர். ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டு உலக மக்கள்
யாவரும் மேன்மை அடைவோம்.
மனதார உச்சரிக்கும் மந்திரம்: முருகனை மனதால் நினைத்துக்கொண்டு வைகாசி விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி திருப்புகழ், சஷ்டி கவசம், படிக்க வேண்டும். ஆறெழுத்தான சரவணபவ என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஞானமும் செல்வமும் பெற...: வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் ஞானமும், செல்வமும் பெருகும். எதிரிகள் அடங்கி ஒடுங்குவர், தீராத நோய் தீரும். பகை விலகி வெற்றிகள் குவியும். குடும்பம் செழிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.