பதிவு செய்த நாள்
12
ஜூன்
2022
07:06
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவில் இன்று (ஜூன்,12) தேரோட்டம் நடைபெறும்.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன், 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன்,15 வரை நடைபெறும். தினமும் காலையில் தங்கப் பல்லக்கில் புறப்பாடு நடைபெறுகிறது. மாலையில் தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, தங்கக்குதிரை என நாள்தோறும் வாகன புறப்பாடு நடைபெறுகிறது. ஆறாம் நாள் திருவிழாவான நேற்று (ஜூன், 11 ல்) யாக பூஜைகளுடன் மூலவர் வள்ளி, தேய்வானை, சமேத சோமாஸ்கந்தருக்கும், உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அரோகரா என பத்தி பரவசத்தில் வழிபட்டனர். வெள்ளி மயில் வாகன புறப்பாடில் சுவாமி எழுந்தருளினார். கோயில் இணை ஆணையர் நடராஜன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்தய்யர், கண்காணிப்பாளர் அழகர்சாமி, புஷ்பகைங்கர்ய சபா மருதசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மாலை 4:15 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு தேர்க்கால் பார்த்தல் நடக்கும். ஜூன்,15 இரவு கொடியிறக்குதலுடன் வைகாசி திருவிழா உற்சவம் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் பக்திச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.