திருப்புத்தூரில் வைகாசி விசாக தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2022 07:06
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மூன்று தேர்களையும் பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்தனர்.இன்று தெப்பத்துடன் விழா நிறைவடைகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஜூன்3 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும்,அம்பாளும் திருவீதி வலம் வந்தது., நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 5:50 மணி அளவில் உற்ஸவ விநாயகர், சோமஸ்கந்தர்-பிரியாவிடை, சிவகாமி அம்மன் ஆகியோர் கோயிலிலிருந்து புறப்பாடாகி மூன்று தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8:30 மணி முதல் பக்தர்கள் தேர்களில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். மாலை 4:00 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் கிராமத்தினர் திருப்புத்துார்,தம்பிபட்டி,புதுப்பட்டி, தென்மாப்பட்டி ஆகியோர் கோயிலில் வரவேற்கப்பட்ட பின்னர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் கிராமத்தினர் தேர்களுக்கு சென்று தீபாராதனை, விடலைத் தேங்காய் உடைத்து தேர் வடம் பிடித்தனர். மாலை 5:00 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது. மூன்று தேர்களும் பக்தர்களால் உற்சாகமாக இழுக்கப்பட்டு 1:20 மணி நேரத்தில் சேர்க்கை வந்து சேர்ந்தது. திரளாக சுற்று வட்டார கிராமத்தினர் தேரோட்டத்தில் பங்கேற்றனர். இன்று பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 10:15 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதலும், இரவு 8:00 மணிக்குதெப்பமும் நடைபெறும்.