பதிவு செய்த நாள்
12
ஜூன்
2022
02:06
திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, சுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தை அமைச்சர் மகேஷ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதில் மூலவர் சுந்தரராஜ பெருமாளும், உடையவளாக சுந்தரவல்லி தாயாரும் எழுந்தருளி உள்ளனர். பிரம்மனுக்கு, அன்பினால் பெருமாள் உபதேசம் செய்த தலம் என்பதால், இவ் வருக்கு அன்பில் எனப்பெயர் விளங்குகிறது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற இக்கோயில் 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் 4-வது தலமாக உள்ளது. இக்கோவிலுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் 33 அடி அகலமும் 27 அடி உயரமும் கொண்ட திருத்தேர் செய்யப்பட்டது. கடந்த மாதம் 25 ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, கோவிலுக்கு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவங்கி வைத்தார். இதில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, லால்குடி ஆர்.டி.ஓ., வைத்தியநாதன், தாசில்தார் ஜெசிலினா சுகந்தி உட்பட பலர் பங்கேற்றனர். அன்பில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள், பெருமாளை வழிபட்டு சென்றனர்.