காஞ்சி மகாபெரியவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கொண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார். பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர். சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக உடல் தளர்ச்சிப் பெற்ற நிலையில் ஒருநாள் மாலையில் தனது சிஷ்யர்களை அழைத்து, தான் சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தைத் தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன் மோட்சம் கிடைக்கும்.
இதைக்கேட்ட சிஷ்யர்களுக்குக் கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக சிதம்பரம் நடராஜருக்குப் பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்துப் பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர். சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய் விட்டனர். மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும் அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து பிரசாதத் தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்துத் தலையில் வைத்தக்கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
இவ்வளவு தெய்வங்கள் ஏன்? - காஞ்சி மகா பெரியவா விளக்கம்
ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி? என்று காஞ்சி மகா பெரியவாளிடம் ஒருமுறை கேட்டார்கள்.அதற்கு, மகா பெரியவா நாம் சாப்பிடுகிறோம். வயிறு நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை மாத்திரம் சாப்பிட்டால், வயிறு நிரம்பி விடுகிறது. அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்வது?
வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி. ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவரவரும் சாப்பிடுகிறார்கள். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள். அப்படியே ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த மூர்த்தங்களைக் கொண்டு, தியானம் பண்ணுகிறார்கள். பிரார்த்தனை பண்ணிக்கொள்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன.இவ்வாறு மகா பெரியவா அருளினார்.