பதிவு செய்த நாள்
13
ஜூன்
2022
11:06
திசையன்விளை: உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்று, திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலாகும்.
இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாகத் திருவிழாவாகும், நடப்பாண்டு விசாகத்திருவிழா. நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில் முதலாவது நாளில் அதிகாலை, மதியம், மாலை, இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், சமயசொற்பொழிவுகள், தேவார இன்னிசை நடந்தது. விசாகத் திருநாளான நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட சிறப்பு பூஜை, மதியம் உச்சிகால சிறப்பு பூஜை, மாலை சிறப்பு அபிஷேகம், இரவு சாயரட்சை சிறப்பு பூஜை, சமயசொற்பொழிவுகள், ராக்காலபூஜை, பக்தி மெல்லிசை, சுவாமி பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் வானவேடிக்கை முழங்கவீதி உலா வந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், முடிகாணிக்கை செலுத்தியும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தவரலாற்றை நினைவு கூரும் வகையில் இக்கோயிலில் மட்டுமே நடைபெறும், பக்தர்கள் கடலில் பிளாப்பெட்டி யில்மணல் எடுத்து, தலையில் சுமந்து, கரையில் குவிக்கும் வித்தியாசமான நேர்த்திக்கடனையும் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.