திருப்புவனம்: திருப்புவனத்தில் நேர்த்திகடனுக்காக 300கிலோ எடையில் ராட்சத அருவா தயாரிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் 25க்கும் மேற்பட்ட அருவா பட்டறைகள் உள்ளன. விவசாய கருவிகளான மண்வெட்டி, அருவா, கடப்பாரை, கதிர் அருக்கும் அருவா, விறகு வெட்டும் அருவா உள்ளிட்டவைகளை தயாரிக்கும் இவர்கள் கருப்பண்ணசாமி கோயிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் ஆர்டர்கள் செய்யும் ராட்சத அருவா செய்து வருகின்றனர். மூன்று அடி முதல் 21 அடி உயரம் வரையிலான அருவாக்கள் நேர்த்திகடனுக்காக உருவாக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் கார்த்திக் லெட்சுமணன் கூறுகையில்: மதுரையில் இருந்து பழைய இரும்பு பட்டாக்களை எடை கணக்கில் வாங்கி வந்து அதனை நெருப்பில் இட்டு உருக்கி அருவா தயாரிக்கப்படுகிறது. 21 உயர அருவா செய்ய குறைந்த பட்சம் 20 முதல் 30 நாட்கள் வரை ஆகும், ஐந்து பேர் சேர்ந்து இந்த வகை அருவா தயாரிக்கிறோம், ஒரு அடி ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதனை கோயில் வளாகத்தில் அப்படியே செங்குத்தாக நிறுத்தி வைப்பார்கள், பொன்னமராவதி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர், என்றார்.