மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் சொக்கநாதப் பெருமான் உடன் சிவசைலத்திற்கு தட்சிண ஞான ரத யாத்திரை புறப்பட்டு சென்றார்.
தென்காசி மாவட்டம் சிவசைலம் சிவசைல நாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று காலை தருமை ஆதீனத்தில் இருந்து பூஜா மூர்த்தியான சொக்கநாதப் பெருமானுடன், தட்சிண ஞானரத யாத்திரையைத் தொடங்கினார். அதனையொட்டி இன்று பூஜை மடத்தில் சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து 27வது குருமகாசன்னிதானம் சொக்கநாதப் பெருமானை தனது தலையில் சுமந்து சென்று ஞான ரதத்தில் எழுந்தருள செய்து மகா தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து ஞானபுரீஸ்வரர், விநாயகர் கோவில்களில் ஞானத்திலிருந்து குருமகாசன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு யாத்திரையைத் தொடங்கினார். இரவு திருநெல்வேலி கட்டளை மடத்திலும், 18ஆம் தேதி திருச்செந்தூர் கோவிலில் வழிபாட்டிற்குப் பின்னர் கட்டளை மடத்தில் தங்குகிறார். 19ஆம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தரிசனம் செய்து, கட்டளை மடம் கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார். 20ஆம் தேதி சிவசைலம் கட்டளை மடத்திற்கு சென்றடைந்து கோவில் கும்பாபிஷேக முதல் கால யாகசாலை பூஜையை தொடங்கி வைத்து வழிபாடு நடத்துகிறார். 23ஆம் தேதி காலை 9 மணிக்கு சிவசைலம் கோவில் கும்பாபிஷேக விழாவிலும், இரவு திருக்கல்யாண உற்சவத்திலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். 24ஆம் தேதி திருக்குறுங்குடி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தரிசனம் செய்கிறார். 25ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மதுரை வழியாக இரவு தருமபுரம் வந்தடைகிறார். நிகழ்ச்சியில் ஆதீன தம்பிரான் சுவாமிகள், தலைமை கண்காணிப்பாளர் மணி, கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.