பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
சூலூர்: "குடும்ப உறவுகள் மேம்பட அனைவரிடத்திலும் அன்பாக பழக வேண்டும்," என, சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசினார். முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத்தின் சார்பில், நமது தேசம் புண்ணிய தேசம் எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் சம்பத்குமார் வரவேற்றார். குடும்ப உறவுகள் மேம்பட என்ற தலைப்பில், பன்முக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசியதாவது: பாரத நாட்டில் பிறந்ததற்கு கடவுளுக்கு நாம் நன்றி கூறவேண்டும். நம்நாடு எண்ணிலடங்கா பெருமைகளை, கலாச்சாரம், பண்பாடுகளை கொண்டது. அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நமது நாட்டின் பலமே குடும்பமாக வாழ்ந்து வருவது ஆகும். மேற்கத்திய நாடுகளில் குடும்ப முறையே கிடையாது. நமது கலாச்சாரம், பண்பாடுகளை ஒட்டியே நமது வாழ்க்கை முறை உள்ளது. மேலை நாட்டவர்களின் கலாச்சாரம் நுகர்வு மட்டுமே. அதை நாமும் பின்பற்ற துவங்கியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இளைய தலைமுறையினர் தவறான வழிகளில் செல்கின்றனர். அவற்றில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதற்கு முக்கிய தேவை அன்பு. வீட்டில், வெளியில் அனைவரோடும் அன்போடு பழக வேண்டும். குழந்தைகளை கோவில்களுக்கு, உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். மாமா, அத்தை, பெரியப்பா, சித்தி போன்ற உறவுகளை அறிமுக படுத்த வேண்டும். குழந்தைகள் மனதில் நமது பண்பாடு, கலாச்சாரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் உறவுகள் மற்றும் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது தெரியும். சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். அதனால், நாம் ஒவ்வொருவரும் அன்பு காட்ட உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.