பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
11:06
திருநெல்வேலி, நெல்லை தாமிர பரணி ஆற்றின் வடக்கு பகுதியில் செப்பறை அழகிய கூத்தர் கோயில் உள்ளது. இங்கு மூலவராக ஸ்ரீ நெல்லையப்பா் சமேத காந்திமதி அம்பாள் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள நடராஜா் சன்னதி தாமிர சபை என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கலச பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் சன்னதியை சுற்றி வந்து கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வர்.
7ம் நாளான ஜூலை 2ம் தேதி காலை 10 மணிக்கு அழகிய கூத்தர், சபையில் இருந்து விழாமண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 3ம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. 4ம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 12.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. 5ம் தேதி காலை 11 மணிக்கு மகாஅபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு நடனதீபாராதனை, சுவாமி ரதவீதி உலாவருதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பிற்காலஅபிஷேகம், 8 மணிக்கு அலங்காரதீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அழகிய கூத்தர் சபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் முருகன், செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.