குடியாத்தம்: ஒலகாசி சிவன் கோவிலில் நந்தி சிலையை சேதப்படுத்தப்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒலகாசி பகுதியில் பாலாற்றங்கரையோரம் விசாலாட்சி சமேத ஒலகாசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லை. சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர், கோவில் முன்புள்ள நந்தி சிலையை சேதப்படுத்தினர். பிரதோஷ பூஜைக்கு நேற்று முன்தினம் நந்தி சிலையை சுத்தம் செய்ய பணியாளர்கள் வந்தபோது இது தெரிந்தது. கோவில் ஆய்வாளர் பாரி புகார்படி, குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.