‘தர்மத்தை கடைப்பிடி. அது உன்னை காத்து நிற்கும்’ என பெரியோர்கள் சொல்வர். தர்மம் என்றால் பிறருக்கு உதவுவது என எண்ணுகின்றனர். அது சரியல்ல. கொடுத்த வாக்கை காப்பது, பெற்றோரின் சொல்லை மதிப்பது, குருவின் கட்டளையை ஏற்பது என அனைத்துமே தர்மம்தான். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் உண்மையே தர்மம். இதை தனது உயிர்மூச்சாக போற்றியவர் ராமபிரான். எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் அவர். ஆனால் அவரே ஒருமுறை குருவின் வாக்கை மீறியதுண்டு. என்னப்பா.. இது! ராமரே இப்படி செய்திருப்பாரா என நீங்கள் யோசிக்கலாம். சொல்லப்போனால் இவரது செயல் தர்மத்தை விடவும் மேலானது. குருவின் வாக்கை மீறினால் எப்படி தர்மமாகும் என நீங்கள் யோசிக்கலாம். இங்கேதான் ‘பொதுதர்மம்’ என்னும் சொல் அறிமுகமாகிறது. இதுதான் தர்மத்தில் எல்லாம் தலையானது. அதைதான் அவரும் பின்பற்றினார். தனது தந்தையின் ஆணையை ஏற்று, காட்டிற்கு செல்ல தயாரானார் ராமர். அப்போது அவரது குலகுருவான வசிஷ்டர், ‘‘ராமா... என் பேச்சை மதிப்பவன்தானே நீ..’’ எனக்கேட்டார். ‘‘இதில் என்ன சந்தேகம்’’ என கேட்டார். ‘‘அப்படியானால் நீ காட்டிற்கு செல்லாதே. இது என்னுடைய ஆணை’’ என்றார். ‘‘குருவே.. எல்லா தர்மங்களைவிட சத்தியம்தான் மேலானது என்று போதித்தீர்கள். தற்போது என் தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை மீறச்சொல்கிறீர்களே.. இது நியாயமா’’ என சொன்னார். ‘‘என் பேச்சை மீறப்போகிறாயா’’ எனக்கேட்டார் வசிஷ்டர். ‘‘நான் உங்களை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் போதித்த தர்மத்தை அதைவிட மதிக்கிறேன். என்னை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். என் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஒத்துழைப்பு தாருங்கள்’’ என பணிவுடன் வேண்டுகிறார் ராமர். பார்த்தீர்களா.. குருவின் பேச்சை மதிப்பது தர்மம் என்றாலும், அவர் போதித்த உண்மையை கடைபிடிப்பதுதான் பொதுதர்மம். இதைத்தான் திருவள்ளுவரும், ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்கிறார். பெற்ற தாயின் பசியை போக்குவது மகனின் கடமை. இது தர்மம். ஆனால் மகனால் அதைக்கூட செய்ய முடியவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறார். இருந்தாலும் தவறான பாதைக்கு செல்லவில்லை. அதுதான் பொது தர்மம். இதுதான் தர்மதேவனான ராமபிரான் கோயிலுக்கு செல்லும் வழி.