பதிவு செய்த நாள்
03
ஜூலை
2022
06:07
சென்னை:பழநி, தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம், அடுத்தாண்டு ஜன., மாதம் நடத்தப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், இரண்டாம் நாள் சீராய்வு கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 277 அறிவிப்புகளின், 4,400 பணிகள் குறித்து, இரண்டு நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பழநி ஆண்டவர் கோவில் கல்லுாரியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பக்தர்கள் அதிகம் வருகை தரும் 10 கோவில்களில், மருத்துவமனைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக, ஐந்து கோவில்களில் மருத்துவமனைகள் துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஐந்து கோவில்களில், நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம் உடனடியாக துவக்கப்படும். அன்னதானத் திட்டம் மேலும், 10 கோவில்களில் துவக்கப்பட உள்ளது.திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் தினசரி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை துவக்கப்படுகிறது. திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி, பட்டீஸ்வரர் கோவிலில் பேட்டரி கார் திட்டம் உள்ளது. அடுத்த மாதம் மீதமுள்ள, 11 கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஜன., மாதம், பழநி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.