திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2022 07:07
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக நாள் நெருங்கி வரும் நிலையில், சுவாமி தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
தென்னகத்து வைகுண்டம் என போற்றப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. 418 வருடங்களுக்கு பின் வரலாற்று சிறப்புமிக்க பழமையாக இக்கோவிலில் நடக்கும் கும்பாபிஷேக விழாவை காண தமிழகம், கேரளா உட்படநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆன்மிக தலைவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் கடந்த 29ம் தேதி அதிகாலை முதல் துவங்கி நடந்து வருகிறது. பிராயசித்த பூஜைகள் மற்றும் ஹோமங்களை கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு தலைமையில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் குழுக்களாக நாராயண நாம ஜெபங்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தினமும் மதியம் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக பூஜைகள் துவங்கிய நாள் முதல் அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் தரிசனத்திற்கு வரிசை ஏற்படுத்தி கூட்டத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். அறநிலையத் துறை குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஆதிகேசவ பெருமாளின் ஸ்ரீபலி விக்ரகம் கோவிலுக்கு உபயமாக வழங்கிய விஸ்வஹிந்து வித்யாகேந்திராபொது செயலாளர் கிரிஜாசேஷாத்திரி நேற்று கோவிலில் தரிசனத்திற்கு வந்தனர். நேற்று முன்தினம் ஸ்தபதி மூலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீபலி விக்ரகத்தை ஆச்சார முறைப்படி அவர், கோவில் மேலாளரிடம் ஒப்படைத்தார்.