பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. "லைலத்துல் கத்ர் எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. இந்த பத்து இரவுகளில் குறிப்பிட்ட ஒரு இரவை, நாம் லைலத்துல் கத்ர் இரவாகக் கொண்டாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுப்படி, ""எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள், என்றார்கள். ""ரமலான் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடுங்கள், என்று நாயகத்தின் துணைவியார் ஆயிஷா (ரலி) அம்மையார் அவர்களும் அறிவித்திருக்கிறார்கள். இப்படி, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படையான இரவுகளில் இந்த இரவை அடைந்து கொள்ளுமாறு கூறினாலும், அதை அடைந்து கொள்வதற்கு, அவர் செயலில் வழிகாட்டும் போது, கடைசி பத்து நாட்கள் முழுவதிலும் முயற்சி செய்து காட்டியுள்ளதைக் காணலாம்.
ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்கள் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள், என்கிறார் ஆயிஷா அம்மையார்.ரமலான் மாதத்தில் அதிக அளவு தொழுகை நடத்த வேண்டும். அதிலும் கடைசி பத்து இரவுகளில் மேலும் மேலும் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் புலனாகிறது. இந்த இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது.நோன்பின் கடைசி பத்துநாட்கள் துவங்கி விட்டது. இந்த நாட்களில் தொழுகைகளை அதிகப்படுத்தி, பாவங்களைப் போக்கி, இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31