பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில், நேற்று காலை மூலவர் சிலை மீது அபிஷேகத்திற்காக, அர்ச்சகர் தண்ணீர் ஊற்றிய போது, தண்ணீர் பாலாக வெளியேறிதாக தகவல் பரவியது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை பரவாசுதேவய்யர் தெருவில், பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம் உள்ளது. இந்த கோவிலில், 341வது ஆண்டு ஆராதனை மஹோத்வச விழா, தற்போது நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8.30 மணிக்கு, கோவில் அர்ச்சகர் சுரேஷ், கோவிலை திறந்து, மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, மூலவர் ஆஞ்சநேயர் சன்னதி முன்பு அமர்ந்துள்ளார். வழக்கமாக, காலை வேளையில் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களை காட்டிலும், அவர் புதியதாக இருந்ததால், அர்ச்சகர் சுரேஷ், அவரிடம் விசாரித்துள்ளார். அதற்கு, "சில ஆண்டுகளாக, ராகவேந்திரர் மடம் இருக்கும் மந்த்ராலயாவில் தங்கிருந்ததாகவும், தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள இந்த மடத்தின் சிறப்பை அறிந்து இங்கு வந்ததாகவும், விரைவில் இந்த கோவிலில் அதிசயம் நிகழும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அர்ச்சகர் சுரேஷ், மூலவர் ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் ஊற்றியுள்ளார். அப்போது, மூலவருக்கு ஊற்றிய தண்ணீர் பாலாக மாறி வெளியேறியுள்ளதை கண்டு ஆச்சரியம் அடைந்த அர்ச்சகர் சுரேஷ், மீண்டும் ஒரு குடம் தண்ணீரை, மூலவர் சிலை மீது ஊற்றியுளார். அப்போதும், தண்ணீர் பாலாக மாறியதை கண்டு, அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு இது குறித்த தகவல் பரவியது. பக்தர்கள், மொபைல் ஃபோன் மூலம் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமானது.சிறிது நேரத்தில், மூலவர் மீது ஊற்றப்பட்ட தண்ணீர் பாலாக மாறியத்திற்கான நிறம் மங்கியுள்ளது. இருப்பினும், பக்தர்கள் அந்த நீரை பாட்டில்களிலும், டம்ளர்களிலும் பிடித்து, வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், கோவில் நிர்வாகத்தினர், கோவில் நடையை பூட்டினர். இந்த சம்பவம், கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.