வருணபகவான் கருணைக்கு ஏக்கம் பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2012 10:08
திற்பரப்பு: மழை வேண்டி பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோயிலில் வரும் 12ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றி வருகிறது. இதனால் அணைகள் உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு, விவசாய பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குமரி மாவட்டத்தின் ஜீவாதாரமான பேச்சிப்பாறை அணையில் நாளுக்கு நாள் நீர்மட்டம் கணிசமாக குறைகிறது. மழையின்றி நீர் நிலைகள் வறண்டு வரும் நிலையில் விவசாய தேவைக்கும், குடி நீருக்கும் அலையும் பரிதாப நிலை ஏற்படாமல் இருக்க மழை வேண்டி முன் காலங்களில் நடந்தது போன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பேச்சியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் வரும் 12ம் தேதி நடக்கிறது. இது குறித்து கோயில் செயலாளர் சபரி கூறியதாவது: பேச்சிப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அருள்பாலித்து வரும் பேச்சியம்மனை அணை கட்டும் போது அம்மன் அருளாசியுடன் அணையின் முன் பகுதியில் குடியிருத்தினர். அன்று முதல் இன்று வரை பூஜைகளும் நடந்து வருகிறது. அணையில் தண்ணீர் திறப்பு போன்ற நிகழ்வுகளின் போது சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் காலப்போக்கில் பூஜைகள் கொடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. அம்மனுக்கு பிடிக்காத வகையில் நடந்து கொண்ட போதெல்லாம் அணைப்பகுதியில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் பரிகார பூஜைகள் அதிகாரிகள் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை பெய்யவில்லை. அணையில் தண்ணீர் மட்டம் குறைகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் சிறப்பு பூஜைகள் நடந்தது. வரும் 12ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. இதற்கு முன் அணையின் முன்பகுதியில் இரண்டாயிரம் அடி உயரத்தில் உள்ள செம்முஞ்சியடி மலையில் சாஸ்தா மற்றும் அம்மன் சன்னதியில் கோயில் மேல்சாந்தி செந்தில் முருகன் தலைமையில் புரோகிதர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். அணையின் உட்பகுதியில் இருந்து முன் பகுதிக்கு குடியமர்த்தப்பட்ட அம்மனுக்கு பூஜைகள் இடையூறு வரும் போது இது போன்ற வறட்சி ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சபரி கூறினார்.