காஞ்சி மஹாபெரியவரின் பக்தராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ரயில்வே அதிகாரியான இவர் சென்னையில் இருந்து மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி முதல் திருநெல்வேலி வரையுள்ள பகுதிகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த சமயத்தில் சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அவரை தரிசிக்க ஏதுவாக திருச்சி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள பகுதியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணினார். அதன்படியே அவருக்கு மாறுதல் கிடைத்தது. எந்த முயற்சியும் இல்லாமல் தன் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு காஞ்சி மஹாபெரியவரின் அருளே என மகிழ்ந்தார்.
இளையாத்தங்குடியில் ஒரு விஜயதசமியன்று மஹாபெரியவருக்கு அபிேஷகம் நடக்க இருந்தது. மனைவியுடன் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். அங்கிருந்த குளக்கரையில் அமர்ந்திருந்த மஹா பெரியவரிடம், தான் அவசர வேலையாக சென்னைக்கு செல்ல இருப்பதால் பிரசாதம் தருமாறு கேட்டார். அங்கு ஒரு தட்டில் இருந்த பழம், தேங்காயை எடுத்துக் கொள்ளச் சொன்னார் மஹாபெரியவர். இதைக் கேட்டு கிருஷ்ண மூர்த்தியின் மனைவி வருத்தமுடன் முகாமை விட்டுச் சென்றனர். அபிேஷகம் முடிந்ததும் மஹாபெரியவர் ஓய்வெடுக்க சென்றார். சிறிது நேரத்தில் மஹாபெரியவர் அனைவருக்கும் விபூதி, குங்குமம் வழங்கச் சொன்னார் அப்போது பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் தர ஏற்பாடு நடந்தது. இதைக் கேள்விப்பட்டு கிருஷ்ணமூர்த்தி மீண்டும் முகாமிற்கு வந்தார். அவரைக் கண்டதும் அருகில் அழைத்து பிரசாதம் கொடுத்து ஆசியளித்தார் மஹாபெரியவர். மனைவியின் மனக்குறை போக்கிய சுவாமிகளின் கருணையை எண்ணி நெகிழ்ந்தார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி ஒருநாள் காஞ்சி மடத்திற்கு வந்தார். அவரிடம்,‘‘ நீ ரிடையராகி விட்டாயா? பென்ஷன் வந்தாச்சா’ எனக் கேட்டார் மஹாபெரியவர். தொகையை முழுமையாக வாங்கியதால் பென்ஷன் கிடையாது என்றார். ‘‘பென்ஷன் வாங்குவதுதான் நல்லது’’ என மறுத்தார் மஹாபெரியவர். கணக்கு முடித்த நிலையில் வாய்ப்பில்லையே என எண்ணினார். ஆனால் மகான் வாக்கு பொய்யாகுமா... ஒரு வாரம் கழிந்ததும் ரயில்வே துறையில் இருந்து கடிதம் வந்தது. பென்ஷன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் வாங்கிய பணத்தை மீண்டும் ரயில்வே துறையில் கொடுத்து விட்டு பென்ஷனுக்கு ஏற்பாடு செய்தார்.