பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
11:07
திருவாரூர்: திருவாரூர் அருகே ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீ ராம பாதுகா சன்னிதிகளின் கும்பாபிஷேகம், மஹா ஸ்வாமிகளின் கரங்களால் நாளை நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம், ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு அருகே ஸ்ரீலஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி உள்ளனர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீ ராம பாதுகா சன்னிதிகளின் மஹா கும்பாபிஷேகம் நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம், ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகளின் கரங்களால் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை, 8:30 மணிக்கு பூர்வாங்க பூஜைகளும், மாலை, 4:30 மணி முதல் காலை வரை யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளன. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் திருவோணமங்கலம் கிராம மக்கள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று குருவருள், திருவருள் பெற கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.