பதிவு செய்த நாள்
06
ஜூலை
2022
08:07
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் காலை 7 மணிக்கு நடந்தது
தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கு கடந்த 2015 ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 2.25 கோடி ரூபாய் கோவில் நிதியிலிருந்து 2017 ம் ஆண்டில் கோபுர கல்காரம் கட்டி முடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பொன்னர் சங்கர் மூலமாக திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்தில் 324 தெய்வ சிலைகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் பொருத்தப்பட்ட ஏழு கலசங்களும் கும்பகோணத்தில் உருவாக்கப்பட்டு பொதிகை மலையில் இருந்து கருங்காலி, செங்காலி, வேங்கை மரங்களையும் சேர்த்து, இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், முந்திரி எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தியும் பக்குவப்படுத்தப்பட்டு கோபுர உச்சியில் பொருத்தப்பட்டது.
இதன் கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலை பூசைகள் கடந்த 4ம் தேதி துவங்கியது. யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் இன்று காலை 6.15 மணிக்கு, கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 7:00 மணிக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் நான்கே முக்கால் அடி உயரம், 60 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட 7 கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தன.