பதிவு செய்த நாள்
09
ஜூலை
2022
08:07
மேட்டுப்பாளையம்: திருப்பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், 2 ஏக்கர் நிலப்பரப்பில், மிகவும் பழமையான, சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோவில் முதன்மை கோவிலாகவும், வனபத்ரகாளியம்மன் கோவில் உப கோவிலாகவும் இருந்தது. காலப்போக்கில் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு, பக்தர்களின் வருகையும், வருவாயும் அதிகரித்தது. அதனால் வனபத்ரகாளியம்மன் கோவில் முதன்மை கோவிலாகவும், சுப்ரமணிய சுவாமி கோவில் உப கோவிலாகவும் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள், 2015ம் ஆண்டு துவங்கியது. புதிதாக கோபுரம், கருவறையின் இரு பக்கம், சிவன், அம்பாள் புதிய சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இது அல்லாமல் நவகிரக சன்னதி, தியான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மூலவர் சன்னதி முன்பு, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. சோபன மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும், அறுபடை வீடு முருகன் சுவாமி சிலைகள், சுதை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜகோபுரம், சுற்றுப்புற மதில் சுவர் என, கட்டுமான பணிகளும் முடிந்துள்ளன. கோபுரத்தின் சிலைகளுக்கு வர்ணம் தீட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து திருப்பணிகளும் முடிந்து, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.
பக்தர்கள் கூறுகையில், மேட்டுப்பாளையம் நகரில், மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். திருப்பணிகள் கடந்த, 8 ஆண்டுகளாக நடைபெற்ற வருகின்றன. அனைத்து பணிகளும் முடிந்தும், இன்னும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். எனவே தமிழக அரசு, உடனடியாக கோவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை வேண்டும், என கூறினர்.
இது குறித்து வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி இயக்குனர் கைலாசமூர்த்தி கூறுகையில்," சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. கோவில் வளாகத்தில் சிறிதளவு தரைதளம் ஒரு இடத்தில் மகிழ்ச்சியவர் பணிகளும் நடைபெற உள்ளன கும்பாபிஷேகம் நடை பெற துறை அதிகாரிகள் உபயோதாரர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளது விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்," என்றார்.