இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு நாட்டின் தளபதி தனது படைகளுக்கு உற்சாகம் தந்து கொண்டிருந்தார். ஆனாலும் வீரர்கள் களைப்பாக இருந்தனர். காரணம் வேறு ஒன்றுமில்லை. எதிரி நாட்டு படைகளின் எண்ணிக்கையே. இதனால் தளபதி ஒரு திட்டத்தை வகுத்தார். ‘‘வீரர்களே.. நீண்ட நாளாக நாம் போரடியும், வெற்றி கிடைக்கவில்லை. எனவே பூவா, தலையா போட்டுப்பார்ப்போம். தலை விழுந்தால் வெற்றி’’ என சொல்லி காசை சுண்டினார். தலை விழுந்தது. வீரர்களுக்கு மகிழ்ச்சி. அதே வேகத்தில் வெற்றியும் பெற்றனர். அதில் ஒரு வீரர், ‘‘பூ விழுந்தால் என்ன செய்திருப்போம்’’ எனக்கேட்க, தளபதி சரித்துக்கொண்டே காசை காண்பித்தார். அதில் இருபக்கமும் தலை இருந்தது. ‘‘நியாயத்திற்காகு போராடினோம். ஆண்டவர் நம்மை வெற்றி பெறச்செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனாலும் இதை புரிய வைக்க முடியாத நிலையில், நான் இருந்ததால் இந்த வழியை கையாண்டேன்’’ என்றார் தளபதி.