பெரிய சன்னதியிலிருந்து தாயார் சன்னதி செல்லும் வழியில் பரமபதவாசல் அருகே மேற்குப்புறம் இவரது சன்னதி அமைந்துள்ளது.
தேவர்களும், அசுரர்களும் மரணமில்லா பெருவாழ்வு பெரும்நோக்கில் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசமேந்தி திருமாலே தன்வந்திரியாய் அவதரித்தார் என்பது புராணங்கள் கூறும் செய்தி. இவரது கையில் உள்ள அமிர்தம் நோய் நொடிகளைத் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது என்பது ஐதீகம். இதனால் இவர் தேவர்களுக்கும், தேவதைகளுக்கும் வைத்தியராகக் கருதப்படுகிறார். இவரை தரிசித்தால் பூவுலக வாசிகளான மனிதர்களும் நோய்,நொடியின்றி வாழலாம், நோய் வசப்பட்டவர்கள் அதிலிருந்து மீளலாம் என்ற நம்பிக்கை உள்ளது. கலியுக வாசிகளுக்கு ஒரு மருத்துவராகவே இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். வலது கையில் அமிர்த கலசத்தை வைத்திருக்கும் இவர், இடதுகையில் அட்டைப்பூச்சியை ஏந்தியுள்ளார். இதன் மூலம் நோயாளிகளின் உடலில் இருந்து அசுத்த ரத்தத்தை உறிஞ்சச் செய்து அவர்களுக்கு சுகமளிப்பார் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. மருத்துவரான தன்வந்திரி சன்னதி இருப்பால், ஸ்ரீரங்கம் கோயிலில் பெரிய பெருமாளுக்கு படைக்கப்படும் நிவேதனங்கள் யாவும் மருத்துவ சாஸ்திரப்படியே தயாராகின்றன. குறிப்பாக ரங்கநாதருக்கு தயாராகும் நிவேதனத்தில் இன்றளவும் கீரை பயன்படுத்தப்படுகிறது, காரத்திற்கு குறுமிளகே பயன்படுத்தப்படுகிறது. மிளகாய் சேர்ப்பதில்லை. பெரிய பெருமாளுக்கு ஆஜீரணம் ஏற்படாமல் இருக்க தன்வந்திரி சன்னதியிலிருந்து வாரம் ஒரு முறை சுக்குவெல்ல லேகியம் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது சுவையான தகவலாகும்.