ஸ்ரீரங்கம் கோயில் ரங்கவிலாச மண்டபத்தை கடந்து கருட மண்டபம் நுழையும் முன்னர் இருப்பது கார்த்திகைக் கோபுரம், இந்த கார்த்திகை கோபுரத்தின் வாயில் காப்போராய், (துவாரபாலகிகளாய்) இருபுறமும் நிற்கின்றனர் புண்ணியநதிகளான கங்கையும், யமுனையும். உலகில் உள்ளோரின் பாவங்களையெல்லாம் போக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என்று புராணங்கள் குறிப்பிடும் இந்த புண்ணிய நதிகள் இரண்டும், ரங்கநாதரை தரிசிக்கும் செல்லும் பக்தர்களை வாசலில் நின்று வரவேற்று அவர்களின் பாதங்களைக்கழுவி (பாதங்கள் மட்டுமல்ல பாவங்களையும் நீக்கி) தூய்மை செய்து அவர்களை புண்ணியர்களாக்கி அரங்கனை சேவிக்க அனுப்புவதாக ஐதிகம். கங்கையும், யமுனையும் இருப்பதான நம்பிக்கை கொண்ட இந்த இடத்தை கடந்து செல்வோரின் பாதங்களில் தெளிந்த நீர் பட்டு, தூய்மை பெற்று அவ்விடத்தை கடப்பதற்கான ஏற்பாடுகள் சில ஆண்டுகள் முன்புவரை இங்கு இருந்தன. எனினும் பல்வேறு நடைமுறை காரணங்களினால் தற்போது இந்த இடத்தில் நீரோட்டம் இல்லாமல் காய்ந்த தரையாகக் காட்சியளிக்கிறது.