கவுமாரியம்மன் கோயில் திருவிழா நாளை அக்கினிசட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2022 04:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா நாளை ஆயிரக்கணக்கானோர் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கவுமாரியம்மன் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆயிரம் கண்ணுடையாளாக அம்மன் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்குவதால் தென் மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
திருவிழா கோலாகலம்: ஜூலை 5ல் சாட்டுதலுடன் கோயில் முன்பு கம்பம் நடப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் எடுத்து ஊற்றி வழிபட்டு வருகின்றனர். ஜூலை 11 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது பத்து நாட்கள் திருவிழாவில் இன்று 9ம் நாள் திருவிழாவில், அதிகாலை 3 மணியிலிருந்து, பிற்பகல் 1 வரை கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி பக்தர்கள் அம்மனை குளிர்வித்தனர். தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு செய்து, சிறிய மாவிளக்கு வாழை இலை தீபத்தில் கையில் ஏந்தி பக்தர்களின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை வைத்து அனைத்து உடல் உறுப்புகளும் சீராக இயங்க வேண்டும் என அம்மனை வேண்டினர். ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அக்னிசட்டி வழிபாடு: முக்கிய பத்தாம் நாள் திருவிழாவினை நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டியில் எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.