பதிவு செய்த நாள்
19
ஜூலை
2022
03:07
அன்னூர்: பெரிய அம்மன், சின்ன அம்மன் கோவிலில், பொங்கல் அபிஷேக விழா நடந்தது.
அன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், பழமையான சின்னம்மன் கோவிலும், ஓதிமலை சாலையில் பெரியம்மன் கோவிலும், கரியாம்பாளையத்தில் ராக்கியண்ண சாமி கோவிலும் உள்ளது, இக்கோவில்களில் 52வது ஆண்டு பொங்கல், அபிஷேக ஆராதனை திருவிழா நடந்தது. காலை 6:00 மணிக்கு பெரிய அம்மன் கோவில் சன்னதியில் கணபதி ஹோமம் நடந்தது. உற்சவ மூர்த்தி, மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து பெரிய அம்மன் மற்றும் சின்ன அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடந்தது. சின்னம்மன் கோவிலில் காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, பெரிய அம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேக பூஜையும் அலங்கார பூஜையும் நடந்தது. பெண்கள் பால்குடம் ஏந்தி, சின்னம்மன் கோவிலில் இருந்து, பெரிய அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர், மதியம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரியாம்பாளையம், ராக்கியண்ணசாமி கோவிலில் சங்கு அபிஷேகம், பூங்கரகம் எடுத்து வருதல், கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன, அன்னூர், அவிநாசி, கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.