பதிவு செய்த நாள்
22
ஜூலை
2022
09:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, ஐந்து நாட்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மலர், மயில் மற்றும் பால் காவடிகளுடன் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டு செல்வர்.
2 ஆண்டுகளுக்கு பின் : இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக நடந்த ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் நிர்வாகம் எளிய முறையில் நடத்தியது.இந்நிலையில், நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் துவங்கியது.
விழாவையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்ககல், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். அதை தொடர்ந்து உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், ஆடி அஸ்வினியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயில், மலர் மற்றும் பால் காவடிகளுடன் மொட்டை அடித்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள், மயில் வாகனம், விநாயகர், முருகர் வேடமணிந்து நடனம் ஆடியவாறு மூலவரை தரிசித்தனர். இலவச தரிசன வழியில், இரண்டரை மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். மேலும், 100 மற்றும் 150 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கும், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று ஆடிப்பரணி : இன்று ஆடிப்பரணியும், நாளை ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழாவும் நடக்கின்றன.இதில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர். இரவு 7:00 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது. மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவின் போது தினமும் மாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் பணியாளர்களின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயபிரியா, துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும், திருத்தணி நகராட்சி நிர்வாகமும் பக்தர்கள் வசதிக்காக நான்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் இடங்களில் மின் விளக்குகள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர குப்பை உடனுக்குடன் அகற்ற, 500 துப்புரவு பணியாளர்கள் இரவு, பகலாக அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் தலைமையில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகருக்குள் வாகனங்கள் வர தடை : முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து ரக வாகனங்களும் திருத்தணி நகரத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நகருக்கு வெளியே நான்கு இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தியும், மாற்றுவழிப் பாதையில் அனுப்பி வருகின்றனர். வாகன பாஸ் பெற்றிருக்கும் வாகனங்கள் மட்டும் நகருக்குள் மற்றும் மலைக்கோவிலுக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதிக்கின்றனர்.
பக்தர்களுக்கு வசதி : ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசிப்பர் என்பதால், கோவில் நிர்வாகம் சார்பில், 25 ஆயிரம் சதுரடியில் தற்காலிக பந்தல், சவுக்கு கட்டையால் க்யூ லைன், 500 டியூப் லைட், 180 சோடியம் விளக்கு, ஏழு இடங்களில் ஆர்ச் மற்றும் மைக்செட் அமைக்கப்படவுள்ளன. மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 44 சிசிடிவி கேமரா, 36 மொபைல் டிவி, 14 வாட்ச் டவர், 100 சவுக்கு பேரீகாட், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 குடிநீர் தொட்டிகள், விழா மேடை, நான்கு இடங்களில் எல்இடி டிவி, 10 டிராக்டர் மூலம் குடிநீர், தற்காலிக முடி காணிக்கை மண்டபங்கள் மற்றும் தெப்பல் கட்டப்பட்டுள்ளது என, மொத்தம் 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.