குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா நாளை ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2022 02:07
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந் திருவிழா நாளை ( ஜுலை 23 ) துவங்கி ஆகஸ்ட் 20 வரை நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் திருவிழா நடைபெறவில்லை என்பதால் இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தேனி மாவட்டம் குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் சுயம்புவாக மூலவராக சனீஸ்வர பகவான் உள்ள கோயில் இது மட்டுமேயாகும், மூலவருக்கு பக்கத்தில் உற்சவர் உள்ளார். ஆண்டு திருவிழாவின்போது இவரே வீதி உலா வருவார். ஆண்டுதோறும் ஆடிமாதம் பெருந் திருவிழா கொண்டாடப்படும் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும், இந்தாண்டு ஜுலை 23, 30, ஆக.6 , 13, 20 தேதிகளில் திருவிழா நடைபெறும்.. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு நாளை (ஜூலை 23 ) முதல் சனிக்கிழமை என்பதால் திருவிழா துவங்குகிறது. ஆகஸ்ட் 20 வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆக. 6 ல் நடைபெறும் மூன்றாம் வார திருவிழ பெருந்திருவிழா என அழைக்கின்றனர். அன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள். ஆக.5 ல் சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் பகல் 12.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். நீலாதேவி போன்று கும்பம் தயார் செய்து, அதற்கு சனீஸ்வர பகவான் மங்கள நாண் சூட்டுவார். திருவிழாவை முன்னிட்டு குச்சனுார் விழாக்கோலம் பூண்டுள்ளது.