பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
01:07
சென்னை : சென்னையில், 1,200 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக நடராஜர் உட்பட, 15 சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.தஞ்சாவூர் சிவாஜி நகரில், ஆர்ட் வில்லேஜ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கணபதி, 45. இவர், 2017ல், ரிஷபதேவர், சிவகாமி அம்மன், மகாவீர் உள்ளிட்ட 14 சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றுள்ளார்.
அதற்காக, சிலைகள் பழமையானவைகள் இல்லை என, இந்திய தொல்லியல் துறையிடம் சான்றிதழ் பெற முயற்சி செய்துள்ளார். அதைப் பெற்றால் தான், இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முடியும்.ஆனால், சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரிகள், சிலைகள் பழைமையானவையாக தென்பட்டதால், சான்றிதழ் தர மறுத்து விட்டனர்.இந்த தகவல், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்.பி., ரவி தலைமையில், டி.எஸ்.பி., கதிரவன் உள்ளிட்ட, 10 பேர் அடங்கிய தனிப்படையினர், கணபதியின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர். இவர், தன்னிடம் உள்ள, சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி செய்து வருவது தெரியவந்தது.இதையடுத்து, கணபதியின் நிறுவனத்தில் புகுந்து, 14 உலோக சிலைகளை நேற்று மீட்டனர்; கணபதி கைது செய்யப்பட்டார்.
பிரமாண்டநடராஜர் சிலை : அதேபோல, சென்னை மணலி அருகே, சாத்தாங்காடு பகுதியில், இரும்பு பொருட்கள் விற்பனை கடை ஒன்றில், 4.5 அடி உயரமுள்ள பிரமாண்டமான பஞ்சலோக நடராஜர் சிலையையும், போலீசார் நேற்று மீட்டுள்ளனர்.இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி அளித்த பேட்டி:சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜெர்மனியில் வசிக்கிறார். பிரமாண்டமான நடராஜர் சிலை தொன்மையானது இல்லை என, 2017ல், இந்திய தொல்லியல் துறையிடம் சான்றிதழ் பெற முயற்சி செய்துள்ளார்.
சிலையை ஜெர்மனிக்கு கடத்தவும் திட்டமிட்டுள்ளார்.சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர்கள், தொன்மையானது, வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என, கூறி விட்டனர்.இதனால், சிலையை புரோக்கர் ஒருவரிடம் ஒப்படைத்து, அந்த பெண் வெளிநாடு சென்று விட்டார்.இந்த சிலை, சென்னை மணலியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரகசிய விசாரணை நடத்தி, 4.5 அடி உயிரமுள்ள பஞ்சலோக நடராஜர் சிலையை மீட்டுள்ளோம். ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம்.
எங்களிடம் உள்ள, தரவுகளின் அடிப்படையில், இந்த சிலை ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய சிலை என, தெரிய வந்துள்ளது.இது, 1,200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். எனினும் சிலையின் தொன்மை மற்றும் பஞ்சலோக தன்மை குறித்து, டில்லியில் உள்ள, தொல்லியல் துறை நிபுணர்கள் மற்றும் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம்.பெரிய சிலை என்பதால், மர்ம நபர்கள் அடிப்பகுதியை துண்டித்து இணைத்துள்ளனர். இது, எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.