திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு ஆடிப்பூர விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2022 01:07
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மனுக்கு ஆடிப்பூர மகோற்சவிழா தங்கக் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்றதாகும். புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60ம் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் பக்தர் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கி ஸ்ரீ அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த புராண நிகழ்வு நடைபெற்ற தலமாகும். இவ்வாலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர திருவிழா கடந்த 17ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி இன்று முதல் திருநாளாக தங்க கொடிமரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு உற்சவம் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப கோடிக்கு சிறப்பு யாகபூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ அபிராமி அம்மன் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை செய்யப்பட்டு ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் தினம் தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை மாலை இரு வேலைகளிலும் வீதி உலா நடைபெறவுள்ளது. முக்கிய திருவிழாவாக வருகின்ற 31ம்தேதி ஒன்பதாம் நாள் திரு விழாவாக தேரோட்டமும், ஒன்றாம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி அமிர்த புஷ்கரணியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.