திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கெங்கை அம்மன் கோவில் பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருக்கோவிலூர், மேல வீதியில் உள்ள பழமையான கெங்கை அம்மன் கோவிலில் ஆடி மாத பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர்.
தொடர்ந்து கெங்கையம்மன், மாரியம்மன், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் ஆவாகனம் செய்யப்பட்டு சக்தி கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து தினசரி மாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 15ம் தேதி மாலை அம்மன் வீதி உலாவும், 16ம் தேதி பகல் 10:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் அலகு குத்தி கோவிலை அடைந்தவுடன், கோவிலிலிருந்து பக்தர்கள் பலரும் தேர் அலகு குத்தி வீதி உலாவரும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தலும், இரவு கும்பம் கூட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றன.