திருச்சி: காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து (பருவமடைந்து), சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், ஆடிப்பெருக்கு நாளான ஆடி மாதம் 18ம்நாளில், தங்களுக்கு வளங்களை வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் வழங்குகின்றனர். ஆடிப்பெருக்கன்று திருச்சியில் கரை புரண்டோடும் காவிரி, மணல்வெளியாக கிடந்ததால், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில், திருச்சி மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றுக்குள் நீண்ட பள்ளம் தோண்டி போர்வெல் மூலம் அதில் தண்ணீர் விடப்பட்டது.காவிரியில் தண்ணீர் இல்லாததால் வழக்கத்துக்கு மாறாக ஆடி 28ம் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றுக்கு வரும் மக்கள் கூட்டம் வெகு குறைவாக இருந்தது. வழக்கமான உற்சாகமின்றி விழா கொண்டாடப்பட்டது. மாலை நேரத்தில் காவிரி பாலத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். கிடா விருந்து: ஆடி 28ம் நாளையொட்டி, மாவட்டம் முழுவதும் வீடுகளில் வீட்டுச்சாமி, குலத்தெய்வ வழிபாடுகள் செய்யப்பட்டன. பல இடங்களில் குல தெய்வத்துக்கு கிடா வெட்டி உறவினர்களுடன் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.