பதிவு செய்த நாள்
13
ஆக
2012
10:08
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் தபசு திருவிழா வரும் 15ம் தேதி துவங்குகிறது.சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் நடப்பது வழக்கம். திருவிழாவில் தினமும் காலை சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேக, அலங்கார, தீபாராதனை, இரவில் கிளி, ரிஷபம், மயில், யானை, காமதேனு போன்ற வாகன சப்பரத்தில் அம்பாள் திருவீதியுலாவும் நடைபெறும். 11ம் நாள் தேரோட்டமும், 13ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாலையில் சுவாமி முகலிங்கநாதராகவும், இரவில் பால்வண்ணநாதராகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தற்போது இக்கோயிலில் ராஜகோபுரம் திருப்பணி நடந்து வருவதால் சமய சிவாச்சாரியார் ஜானகிராமன் ஐயர் அறிக்கையை ஏற்று இவ்வாண்டும் சென்ற ஆண்டைப்போல் ஆவணித்தபசு திருவிழாவை கோயிலுக்கு உள்ளேயே உள் பூஜையுடன் நடத்த திட்டமிடப்பட்டு வரும் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் மதியம் சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. உள் பூஜையாக திருவிழா நடப்பதால் இத்திருவிழாவை முன்னிட்டு நடக்கும் தேரோட்டம் மற்றும் தபசுக்காட்சிகள் ஆகியன நடைபெறாது. விழா ஏற்பாடுகளை துணை ஆணையர் மற்றும் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் அன்புமணி, மண்டகப்படிதாரர்கள் கரிவலம்வந்தநல்லூர் துரைராஜ் சகோதரர் ராமகிருஷ்ணன், யாதவர் சமுதாயம், பிள்ளைமார் சமுதாயம், சென்னிகுளம் சுப்பாரெட்டியார், வணிக வைசிய சங்கம், சைவ செட்டியார் சங்கம், தேவர் சமுதாயம், விஸ்வபிரம்ம மகாசபை, குவளைக்கண்ணி தேவேந்திரகுல வேளாளளர் சங்கம், இந்து நாடார் சங்கம், கம்மவார் சமுதாயம், லிங்கப்பா உட்பட பல்வேறு சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.