ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச ஓய்வறை கூடம் இல்லாததால், கோயில் வீதியில் உணவு அருந்தும் அவல நிலை உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி, அம்மனை தரிசிக்கின்றனர். இதன்பின் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு குடிநீர் பருக, இயற்கை உபாதை செல்ல ஹிந்து அறநிலைதுறையின் இலவச ஓய்வறை கூடம் இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் சில பக்தர்கள் தனியார் விடுதியில் தங்குவதால், கூடுதல் செலவீனம் ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் தனியார் விடுதியில் தங்கிட வசதியின்றி கோயில் கிழக்கு ரதவீதி, கோயில் அலுவலகம் முன்பு அமர்ந்து சுகாதாரமற்ற முறையில் சாப்பிடும் பக்தர்கள், தாகம் தணிக்க குடிநீருக்காக அவதிப்படும் அவல நிலை உள்ளது. திருச்செந்தூர், பழனி கோயிலில் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதியுடன் கூடிய ஓய்வறை கூடம் இருந்தும், ராமேஸ்வரம் கோயிலில் ஓராண்டுக்கு ரூ. 13 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தும், இலவச ஓய்வறை கூடம் இல்லாததது பக்தர்களுக்கு வேதனை அளிக்கிறது.