பதிவு செய்த நாள்
10
ஆக
2022
03:08
சென்னை:மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடையில் உள்ள சுந்தரநாயகி அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வருகிற தை மாதத்தில் நடக்கும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தரங்கம்பாடி அருகில் நல்லாடையில் உள்ள சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. கோவில் நிர்வாக அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், கும்பாபிஷேகம் நடத்த, 31 லட்சம் ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது. திருப்பணி பாலாலயம் 2022 பிப்ரவரி 14ல் நடந்தது. கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. வருகிற தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.