தியாகதுருகம்: கோவிந்தசாமி புரத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கோவிந்தசாமி புரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் கடந்தாண்டு துவங்கியது. மூலவர் விமானம், அர்த்தமண்டபம் ஆகியவை செப்பனிட்டு புதுப்பிக்கப்பட்டது. நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 9ம் தேதி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் அம்மன், காத்தவராய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.