பதிவு செய்த நாள்
12
ஆக
2022
05:08
மேட்டுப்பாளையம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
* மேட்டுப்பாளையம் காட்டூரில், தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நான்காவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, ஜெகநாதன் லே அவுட்டில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து, பால் குடங்களை எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
*சிறுமுகை வ.உ.சி., நகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு, ஆடி வெள்ளி நான்காவது வார வழிபாடு நடந்தது. விழாவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தபின், அலங்கார பூஜை செய்தனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*சிறுகைபுதூரில் ராமர் கோவில் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
*மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பேட்டை மகா மாரியம்மன் கோவில் அருகே, தேவி ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால விநாயகர், பஞ்சபூதநாதர், பாலமுருகர் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தேவி ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். காலையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்த பின்பு, அம்மனுக்கு கூழ் வார்த்தலும், அபிஷேக பூஜையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு ஆகர்ஷண பூஜையும், குருதி பூஜையும் நடந்தது. இன்று மகா முனியப்பனுக்கு சாம பூஜையும், சமபந்தி விருந்தும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.