பதிவு செய்த நாள்
16
ஆக
2012
10:08
தென்காசி: வனப்பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சென்று பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து வக்கீல் முன்னணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்து வக்கீல் முன்னணி மற்றும் வக்கீல்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தென்காசியில் நடந்தது. கூட்டத்திற்கு இந்து வக்கீல் முன்னணி நெல்லை மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். தென்காசி மூத்த வக்கீல் முருகேசன், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணசுவாமி, பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜிவ்காந்தி, தென்காசி வக்கீல் காதர்சிங் முன்னிலை வகித்தனர். இந்து வக்கீல் முன்னணி மாவட்ட துணைத் தலைவர் திருமால்வடிவு வரவேற்றார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், இந்து வக்கீல் முன்னணி மாநில தலைவரும், ஐகோர்ட் வக்கீலுமான சுவாமிநாதன், மாநில செயலாளர்கள் குற்றாலநாதன், பழனிச்செல்வம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பொதிகை மலையில் உள்ள அகஸ்தியர் கோயில், செண்பகாதேவி அம்மன் கோயில், அவ்வையார் கோயில், சித்தர் ஞானியார் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாத வகையில் வனத்துறையினர் பக்தர்களை துன்புறுத்துகின்றனர். வனப்பகுதியில் இருக்கும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்றுவர வனத்துறையினர் அனுமதி கொடுக்காத பட்சத்தில் கோர்ட் மூலம் பரிகாரம் தேடி கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் தென்காசி காசிவிசுவநாதர் கோயில் வாசல்களை ஆக்ரமித்து கடைகள், வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு உரிய பூஜை முறை நடக்க முடியாத வகையில் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டுத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூட்டியே காணப்படும் வடக்கு, தெற்கு வாசல் கதவை திறந்து உரிய வழிபாடு நடக்க வேண்டும். இந்து இளம் வக்கீல்களுக்கு சட்ட பயிலரங்குகளை நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வக்கீல்கள் ஹரிபாலகிருஷ்ணன், வேலுச்சாமி, ரவிசங்கர், மாரிமுத்துராஜ், மந்திரமூர்த்தி, ஆசைத்தம்பி, அன்பழகன், சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் சுடலைமுத்து நன்றி கூறினார்.