பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: ஆக.30 ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2022 08:08
திருப்புத்தூர்:சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவின் ஆறாம் நாளில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது.
இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.மாலை 5:00 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும், யானை வாகனத்தில் உற்ஸவ விநாயகரும் எழுந்தருள சிறப்பு பூஜைகளை சோமசுந்தர குருக்கள் நடத்தினார். பின்னர் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புறப்பாடாகி ராஜகோபுர முன் மண்டபம் எழுந்தருளி, மூலவரிடமிருந்து கொண்டு வரப்பட்ட தந்தம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலிலிருந்து விநாயகர் புறப்பாடாகி யானை முக சூரனை எதிர்கொண்டு தந்தத்தால் சூரன் தலைகளை கொய்து வதம் செய்தார். பக்தர்கள் ஆரவாரத்துடன் தரிசித்தனர். கோயில் ராஜகோபுரம் மற்றும் கோயில் குளத்தின் வடக்கு புறமும் போடப்பட்டிருந்த அத்தப்பூ கோலங்கள் பக்தர்களை கவர்ந்தது.ஆக.30 ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். ஆக.31 ல் காலை தீர்த்தவாரி, மதியம் மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்தி உலா நடை பெறும்.