பதிவு செய்த நாள்
17
செப்
2022
06:09
பல்லடம்: பல்லடம் அருகே, 700 ஆண்டுக்கு முந்தைய பெண் தெய்வ சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூர் கிராமத்தில் உள்ள மயானம் அருகே, பெண் தெய்வ சிலை உள்ளது. இது, ஏறத்தாழ, 700 ஆண்டுக்கு முந்தையதாக கூறப்படுகிறது. பெண் ஒருவர் குழந்தையை கையில் ஏந்தியபடி நின்றுள்ளார். சிலையின் கீழ் பகுதியில், இரண்டு காளை மாடுகளும் உள்ளன.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், சுமார், 700 ஆண்டுக்கு முன்னால், தனது கைக்குழந்தையுடன் இப்பகுதியில் மாடு மேய்க்க வந்த பெண் ஒருவர், காளை மாடுகளால் முட்டப்பட்டு குழந்தையுடன் இதே இடத்தில் உயிரிழந்தார். அவரது நினைவாக, இப்பகுதியில் முன்னோர்கள் அவருக்கு கோவில் எழுப்பி தெய்வமாக வழிபாடு செய்தனர். முன்னோர்களைப் பின்பற்றி நாங்களும் இக்கோவிலில் வழிபாடு செய்து வருகிறோம். தாயுடன் சேயும் இறந்ததால், குழந்தையுடன் தாய் நிற்பது போன்றும், மாடுகள் முட்டி இறந்ததன் காரணமாக, சிலையின் கீழ் பகுதியில் மாடுகளின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் இருக்கும் இடத்தில்தான் குழந்தையுடன் தாய் உயிரிழந்த சமாதி உள்ளது. இக்கோவிலில் வாசல் தெளித்து, பெண் தெய்வத்தை வழிபட்டு வந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பிறக்காதவர்களுக்கு குழந்தை வரும் கிட்டும் என்பது ஐதீகம் என்றனர்.