பதிவு செய்த நாள்
22
செப்
2022
02:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தொடர்ந்து 16 திங்கட்கிழமை 16 அகல் விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும் என, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதனால், இக்கோவிலுக்கு திங்கட்கிழமையில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி, சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே ஏற்றப்பட்டு காலியான அகல் விளக்குகள் அகற்றப்படாமல், மலை போல மூட்டை மூட்டையாக கட்டி போடப்பட்டுள்ளன.இதனால், தீபம் ஏற்றும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், தீபம் ஏற்றுவதற்கு போதுமான இடம் இல்லாததால் நடந்து செல்லும் வழியில் தீபம் ஏற்றி விட்டு செல்கின்றனர். இதனால், ஆடைகளில் தீப்பற்றி தீ ஏற்படும் சூழல் உள்ளது.தீபம் ஏற்றும் இடத்தில் பக்தர்களுக்கு இடையூறாக, மலைபோல குவிந்துள்ள காலி அகல் விளக்குகளை அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.