உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 05:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு திருப்பாவாடை தளிகை சிறப்பு வழிபாடு நடந்தது.
நடுநாட்டு திருப்பதி, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக் கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 06:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 8:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், கதம்ப சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் படையலிடப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருப்பாவாடை தளிகையுடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி மூலஸ்தானத்தில் எழுந்தள்ளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.