திருக்கடையூர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 05:09
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் சிவன் மனைவியுடன் வந்து ஆயுஸ் ஹோமம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில் சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் நாள்தோறும் ஏராளமான 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபடுவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு இன்று இஸ்ரோ முன்னாள் தலைவரும் தற்போதைய இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனக்கு 66 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து, தனது மனைவி மாலதியுடன் வந்தார் அவர்களை திருக்கடையூர் கோவில் நிர்வாகம் சார்பில் தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா ஆகியோர் வரவேற்றார். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற டாக்டர் சிவன் அவரது மனைவி மாலதி இருவரும் கோ பூஜை கஜ பூஜை செய்தனர் தொடர்ந்து யாக மண்டபத்தில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. அதன் பின்னர் டாக்டர் சிவன் தம்பதியர் அமிர்தகடேஸ்வரர் கால சம்ஹார மூர்த்தி அபிராமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர் பூஜைகளை சண்முகசுந்தரர் குருக்கள் தலைமையில் ஆனோர் செய்து வைத்தனர். இஸ்ரோ அதிகாரி கௌரிசங்கர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.