பதிவு செய்த நாள்
29
செப்
2022
10:09
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் தமிழக கலாசாரம், பாரம்பரியம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை விளக்கும் சக்தி கொலு மூன்றாம் நாள் விழாவை, கோவில் பெண் பணியாளர்கள் மற்றும் தரிசிக்க வந்த பக்தர்களால் குத்துவிளக்கேற்றி துவக்கப்பட்டது. சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று, வடபழநி ஆண்டவர் கோவில். நவராத்திரி விழா முன்னிட்டு, சக்தி கொலு எனும் பெயரில் கொலு வைக்கப்பட்டு உள்ளது.ஹிந்து மதத்தில் பல விஷயங்கள், வழக்கங்கள், தெய்வங்கள் பல ரூபங்களில் உள்ளன.
இது போன்ற விஷயங்களை பக்தர்களுக்கு விளக்கும் நோக்கத்தில், பொம்மைகள் மற்றும் காட்சிகள் பற்றிய தகவல்கள், சக்தி கொலுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.கொலுவில் உள்ள பொம்மைகளை பார்க்க வரும் பக்தர்கள், இதில் எழுதப்பட்ட தகவல்களை படித்து, அறிந்து கொள்ள முடியும்.அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ள சில அரிதான காட்சி பொம்மைகள் எந்த வரிசையில், எந்த படியில் இருக்கிறது என்ற விபரம், தமிழக முருகர் கோவில்கள் விபரமும் தனித் தகவலாக அளிக்கப்பட்டுள்ளன.நவராத்திரியின் மூன்றாம் நாளான நேற்று, காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.நேற்று மாலை, அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் பெண் பணியாளர்கள், தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மூன்றாம் நாள் சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. இரவு, ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.